வடமதுரை அருகே கிணற்றில் கன்றுடன் விழுந்த 2 காட்டு மாடுகள் தத்தளிப்பு: 10 மணி நேரம் தாண்டி தொடர் மீட்பு போராட்டம்

வேடசந்தூர்:  வடமதுரை அருகே கன்றுடன் வந்த 2 காட்டு மாடுகள் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தன. அவற்றை மீட்க 10 நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு, வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே அயனாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன். இவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அய்யலூர் வனப்பகுதியில் உள்ள தொப்பையைசாமி மலைப்பகுதியில் இருந்து ஒரு வயதுடைய கன்றுக்குட்டி, 2 காட்டு மாடுகள் வழிதவறி வந்து கிணற்றில் தவறி விழுந்தன. அவற்றின்  அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது உள்ளே 3 மாடுகள் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அய்யலூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் கிணற்றில் இருந்து மாடுகளை மீட்க முடியாததால் குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்று நீரில் மாடுகள் தத்தளித்துக் கொண்டிருந்தால், தண்ணீரை மோட்டார் மூலம் தீயணைப்புத்துறையினர் வெளியேற்றினர். இதன் பின் கிணற்றில் இறங்கிய தீயணைப்புத்துறை வீரர்களை, மாடுகள் முட்ட வந்தன. இதனால் அவற்றை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின் மாடுகளை மயக்கமடையச் செய்து மீட்க வேண்டும் என்பதால் கோவையில் உள்ள மருத்துவக்குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன் மாடுகளுக்கு மயக்க ஊசி செலுத்தி சில மணி நேரங்களில் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்படும் என அய்யலூர் வன சரக அலுவலர் குமரேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கிணற்றில் தண்ணீர் உள்ளதால் மாடுகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆறரை மணி வரை மாடுகளை மீட்க கோவை மீட்பு குழுவினரும், வனத்துறையினரும் தீயணைப்பு துறை போராடி வருகின்றனர்’’ என்றார். 10 மணி நேரமாக  காட்டு மாடுகளை மீட்க நடக்கும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு பார்த்தனர்.

Related Stories: