சன்ரைசர்ஸ் - நைட் ரைடர்ஸ் சென்னையில் இன்று பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் தொடரின் 14வது சீசன் 3வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி இம்முறை கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகிறது. கடந்த சீசனில் விளையாடிய அதே வீரர்கள் அணியில் தொடர்கின்றனர். முஜிப் உர் ரகுமான், கேதார் ஜாதவ், ஜெகதீசா சுசித் என 3 பேர் மட்டுமே புதியவர்கள். கடந்த சீசனில் காயம் காரணமாக விலகிய புவனேஷ் குமார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதிலும் இந்தியா - இங்கிலாந்து தொடரில் கலக்கிய புவனேஷ்வர், பேர்ஸ்டோ, ஜேசன் ராய், நடராஜன் ஆகியோர் அணியில் இருப்பது கூடுதல் பலம்.

இவர்களுடன் வில்லியம்சன், ஹோல்டர், மணிஷ் பாண்டே, விருத்திமான் சாஹா, விஜய் ஷங்கர், கலீல் அகமது, ரஷீத் கான், முகமது நபி, முஜிப் உர் ரகுமான் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்ப்பதில் வல்லவர்கள். அதனால் வெற்றி கணக்கை இன்று தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் ஐதராபாத் களம் காண உள்ளது. அதே சமயம், கொல்கத்தாவும் கேப்டன் இயான் மார்கன் தலைமையில் அதிரடி வீரர்களை குவித்து வைத்துள்ளது. ராணா, ரஸ்ஸல், சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், நாகர்கோட்டி, பேட் கம்மின்ஸ், கருண் நாயர், ஷாகிப் அல் ஹசன், ஹர்பஜன், டிம் செய்பெர்ட், பிரசித் கிருஷ்ணா, பென் கட்டிங், குல்தீப் யாதவ் என பட்டியல் நீளுகிறது. முதல் வெற்றி தொடரை உற்சாகமாக தொடங்க உதவும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக இன்று மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை மோதியதில்...

இரு அணிகளும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கொல்கத்தா 12 ஆட்டங்களிலும், ஐதராபாத் 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டி சரிநகர் சமனில் (டை) முடிந்தது. தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற்றது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கொல்கத்தா 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக ஐதராபாத் 209 ரன், கொல்கத்தா 183 ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 128 ரன்னிலும், கொல்கத்தா 101 ரன்னிலும் சுருண்டுள்ளன.

Related Stories: