கோடை காலத்தில் குளிர் காற்றாய் வந்த வானிலை அறிக்கை: தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி.!!!

சென்னை: தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட அறிக்கையில்,  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (10-04-2021) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (11-04-2021) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (12-04-2021) தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில்  பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு( சென்டி மீட்டரில்): திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் வட்டணம் ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: