வாலாஜா அடுத்த அனந்தலை மலையில் கல்குவாரிகளுக்கு வைக்கும் வெடியால் சுற்றுப்புற கிராம வீடுகளில் விரிசல்

* மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது

* பீதியில் தூக்கம் தொலைத்து தவிக்கும் மக்கள்

வாலாஜா : வாலாஜா அருகே அனந்தலை கிராமத்தில் மலைப்பகுதியில் உள்ள கல்குவாரிகளின் வெடிசத்தத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் இரவில் மக்கள் தூக்கத்தை தொலைத்து அதிர்ச்சியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை மலையில் எண்ணற்ற கல்குவாரிகள் இயங்குகின்றன. இந்த அனந்தலை மலையில் இயங்கும் குவாரிகள் பாறைகளை உடைப்பதற்கு முறைகேடாக வெடிவைத்து அதிக சப்தத்துடன் கூடிய வெடிகளை பயன்படுத்தி வெடிப்பதால் அனந்தலைமலை சுற்றியுள்ள அனந்தலை, எடக்குப்பம், வாலாஜா, அம்மணந்தாங்கல், தென்கடப்பந்தாங்கல், செங்காடுமோட்டூர், ஈச்சந்தாங்கல், முசிறி போன்ற கிராமங்கள் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

மேலும் இக்கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். மலையில் அமைந்துள்ள கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும்போது ஏற்படுகின்ற காற்று மாசு மற்றும் புழுதியினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாறைகளை உடைப்பதற்கு முறைகேடாக வெடிவைத்து தகர்ப்பதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றது.

மேலும் இரவில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் முறைகேடாக நடக்கின்ற இந்த செயலினால் அனந்தலை மலையை சுற்றியுள்ள கிராமமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என சுற்றுப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: