அரக்கோணம் அருகே தொடர்ந்து பதற்றம்: இரட்டை கொலையில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 2 பேர் கைது: கிராம மக்கள் 3வது நாளாக போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரட்டை கொலையில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று 3வது நாளாக தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகர பகுதியில் கடந்த 7ம் தேதி இரவு பெருமாள்ராஜபேட்ைட, சோகனூர், செம்பேடு பகுதிகளை சேர்ந்த இருபிரிவு  வாலிபர்களுக்கு  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சோகனூரை சேர்ந்த அர்ஜூன்(25), செம்பேட்டைச் சேர்ந்த சூர்யா(27) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சோகனூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர்,  கொலையாளிகளை கைது செய்யும்படி கூறி 7ம் தேதி இரவு முதல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் சரக டிஐஜி காமினி, ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை போராட்டத்தை  கைவிடமாட்டோம் என கூறிவிட்டனர்.இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த அஜித்(24), மதன்(37), சுரேந்தர்(19), நந்தா(20) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சாலை  கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(20), பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சத்யா(24) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பலரை தேடி  வருகின்றனர். ஆனாலும் சோகனூர் கிராம மக்கள், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி 3வது நாளாக தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை டிஆர்ஓ ஜெயச்சந்திரன் நேற்று அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேலூர் எஸ்பி செல்வகுமார், முன்னாள் எம்எல்ஏ லதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள், ‘‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு ெதாடர்ந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். அதற்கு டிஆர்ஓ, ‘‘தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே சடலங்களை பெற்றுக்கொள்வோம்  என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் எஸ்பி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: