நாகை குழந்தைகள் காப்பகத்தில் 50 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் மனநல ஆலோசகர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் அரசு குழந்தைகள் காப்பக 50 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மன நல ஆலோசகர் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு அன்னை சத்யா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இதன் கண்காணிப்பாளராக சசிகலா உள்ளார். இந்த காப்பகத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆரவற்ற முதியோர்கள் என தங்கியுள்ளனர்.

குழந்தைகள் காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக காப்பகத்தில் இருந்து மாணவிகள் மாயமாவதும், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் என தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வந்தது. இதேபோல் கடந்த மாதம் 11ம்வகுப்பு படித்து வந்த 8 மாணவிகள் திடீர் மாயமானர்கள். பின்னர் போலீசார் சென்னையில் இருந்து 8 பேரையும் மீட்டு மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு மனநல ஆலோசனை அளிக்க மனநல ஆலோசகர் நாகப்பட்டினம் பெருமாள் கீழவீதியை சேர்ந்த சத்யபிரகாஷ் (44) என்பவர் வாரம் ஒருமுறை காப்பகத்துக்கு வருவது வழக்கம். இவர், காப்பகத்தில் தங்கியிருக்க கூடிய சிறுமிகளுக்கு குட் டச், பேட் டச் வகுப்பு எடுப்பதாக கூறி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும், தவறான வார்த்தைகளால் பேசுவதாகவும், குறிப்பாக 15, 17 வயது சிறுமிகள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் காப்பக கண்காணிப்பாளர் சசிகலாவிடம் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கண்காணிப்பாளர் சசிகலா, நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேம்பரசி பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் 50 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து காப்பகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தார். இதில் மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சத்யபிரகாஷை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகை குழந்தைகள் காப்பகத்தில் 50 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் மனநல ஆலோசகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: