ஏரிகளில் மண் எடுப்பதை தடுக்க விவசாய சங்கம் கோரிக்கை

கோலார்: ஏரிகளில் இருந்து மண் எடுத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரியிடம் கர்நாடக விவசாய சேனா அமைப்பினர் மனு கொடுத்தனர். கோலார் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரி என்.எம்.நாகராஜிடம் கர்நாடக விவசாய சேனா அமைப்பின் கோலார் மாவட்ட தலைவர் கணேஷ்கவுடா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கோலார் மாவட்டம் ஏற்கனவே வறட்சி பிடியில் உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. ஏரி, குளங்கள், ஆறு, நதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயம் பொய்த்து விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கால்நடைகளுக்கான தீவன பற்றாகுறையும் உள்ளது.

இந்நிலையில் கோலார் தாலுகாவில் உள்ள பல ஏரிகளில் டிராக்டர், லாரிகள் மூலம் மண் எடுத்து பக்கத்து மாநிலங்களான தமிழகம், ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு பின்னால் கிராம நிர்வாக அதிகாரிகளும் கை கோர்த்துள்ளனர். மண் எடுப்பதை தடுக்க சென்றாலும் அதிகாரிகள் தலையீடு காரணமாக முடியவில்லை. ஏரிகளில் மண் எடுப்பதால், நிலத்தடி நீர் மட்டும் மேலும் குறையும், தற்போதுள்ள குறைந்த பட்சம் நீராதாரமும் வற்றி போகும். இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.மாநில அரசு செயல்படுத்தி வரும் கே.சி.வேலி திட்டம் மூலம் சில ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் சில ஏரிகளுக்கு விரைவில் நீர் நிரப்பப்படும்.

இந்த சமயத்தில் மண் எடுத்தால், ஏரிகள் பாழாகிவிடும். விவசாயிகளின் ஆதாரமாக இருக்கும் ஏரிகளை காப்பாற்ற வேண்டுமானால் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால், போராட்டத்தில் குதிப்போம் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: