கடைவரம்பு விவசாயிகள் பயன் பெற பாசன அணைகள் அடைக்கும் தேதி நீட்டிக்க பரிந்துரை இந்தாண்டாவது கால்வாய்கள் பராமரிக்கப்படுமா?

நாகர்கோவில்: கடைவரம்பு விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் மார்ச் 31ம் தேதி வரை பாசன அணைகள் திறக்க பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. குமரியில் பாசனத்திற்காக 6 அணைகள் இருந்தாலும் பிரதான அணையாக பேச்சிப்பாறை அணையும் அதனை அடுத்து பெருஞ்சாணி அணையும் உள்ளன. இதில் இருந்து  தோவாளை கால்வாய், நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய், அனந்தனாறு கால்வாய், பத்மனாபன் புத்தன் கால்வாய்(பி.பி சானல்) பாண்டியன் கால்வாய், பட்டினங்கால் கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இதில் தோவாளை கால்வாய் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வரை பாசன வசதி பெறுகிறது. ஜூன் 5ம் தேதி திறக்கப்படும் பாசன அணைகள் பிப்பரவரி  மாதம் 28ம் தேதி அடைக்கப்படுவது வழக்கம். பின்னர் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். அணைகள் பிப்ரவரி மாதம் அடைக்கப்படுவதால் தோவாளை கால்வாய் உள்பட அனைத்து கால்வாய்களிலும் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல்,  மக்கள் விளைநிலங்களை வீட்டு மனையாக மாற்றும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.

எனவே குமரி முதல் கருங்கல் வரை விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டு போராடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் சில நேரங்களில்அரசின் சிறப்பு அனுமதி பெற்று பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் உயர பாசன அணைகள் திறக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறப்பு அனுமதி பெற காலதாமதம் ஆவதால், பிப்ரவரி 28ம் தேதி அணைகள் மூடப்படுவதற்கு பதில் மார்ச் 31ம் தேதி வரை அணைகளை திறக்க நிரந்தர அனுமதி கோரி குமரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதன் காரணமாக வரும் ஆண்டில் இருந்து, மார்ச் 31ம் தேதி வரை அணைகள் திறந்து தண்ணீர் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரியில் கடந்த சில ஆண்டுகளாக கால்வாய்கள் பராமரிப்பு இன்றி படித்துறைகள், அடி மடைகள், கால்வாய் கரைகள் பெயர்ந்தும் தூர்ந்தும் காணப்படுகின்றன. பொதுவாக தமிழகம் வடகிழக்கு பருவமழையை நம்பி இருப்பதால், அதனை கணக்கில் கொண்டு, தமிழகத்தில் கால்வாய் பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், குமரியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை என இரு பருவமழையும் கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான மாதங்கள் மழை பெய்கிறது. இதில் அணைகள் மூடப்படும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் என 3 மாதங்கள் மட்டுமே கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் மரமாத்து பணிகள் மேற்கொள்ள முடியும். மேலும் நிதிஒதுக்கீடு குறைவால் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவதில்லை.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பணியிடத்தில் பொறுப்பு அதிகாரிகள் காரணமாக பராமரிப்பு பணிகளே நடைபெறவில்லை. இதனால், பல படித்துறைகள், மடைப்பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. எனவே இந்தாண்டாவது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழையாற்றில் தண்ணீர் திறக்கப்படுமா?

குமரியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், தற்போது பழையாறு உள்பட முக்கிய ஆறுகளில் கிணறுகள் அமைத்து பல கிராமங்களில் குடிதண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. பழையாற்றில் பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, வீரநாரயண மங்கலம் பகுதிகள் என 32 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, பாசன அணைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், மழையும் இன்மையால் பழையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால், குடிநீர் கிணறுகளிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. குடிதண்ணீர் இன்றி மக்கள் இப்போதே குடங்களுடன், அலைய தொடங்கி விட்டனர். எனவே பழையாற்றில் குடிதண்ணீருக்கு தேவையான தண்ணீரை திறந்து விட பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: