நள்ளிரவு 12 மணிக்கு வாக்குச்சாவடியில் நுழைந்து விவிபேட் இயந்திர பேட்டரியை கழற்றிய அலுவலரை மக்கள் முற்றுகை: திருவெண்ணெய்நல்லூரில் நடந்தது

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் வாக்குச்சாவடியில் நள்ளிரவில் நுழைந்து விவிபேட் இயந்திர பேட்டரியை கழற்றிய அலுவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ஏமப்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த 258, 259, 260 என மூன்று வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. இரவு 7 மணிக்கு மூன்று வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவை முடித்து அந்தந்த வாக்குச்சாவடி ஏஜென்டுகள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதில் 259வது வாக்குச்சாவடியில் இரவு 12 மணி அளவில் வாக்குச்சாவடி அலுவலர் விவிபேட்  இயந்திரத்தில் உள்ள பேட்டரியை கழற்றி வைக்காமல் விட்டுவிட்டார். இதனால் யாரும் இல்லாத நேரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று விவிபேட் இயந்திரத்தில் உள்ள பேட்டரியை கழற்றியுள்ளார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த ஒருவர் பார்த்து தெரிவிக்கவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வாக்குச்சாவடி மையத்திற்கு முன் திரண்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இயந்திரங்களை எடுத்து செல்லக்கூடாது என்று கூறி வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்டாட்சியர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வந்து பேட்டரிடிய கழற்றியதால் வாக்குப்பதிவு மாற்றம் ஏற்படாது என்று பொதுமக்களிடம் கூறினர். இருந்து ம் அப்பகுதியினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

அங்கு பதிவான 551 வாக்குகளுக்கு மேல் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி அலுவலரே பொறுப்பேற்பதாகவும், தவறு நடந்திருப்பின் தன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர் எழுதி கையொப்பம் இட்டு கொடுத்தார். தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: