ஊன்றுகோல் உதவியுடன் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்

கோவை: கோவையில். வாக்கு எண்ணும் மையத்தை ம.நீ.ம.கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் ஊன்றுகோல் உதவியுடன் வந்து நேற்று பார்வையிட்டார். கோவையில் கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தொண்டர் ஒருவர் அவரின் அறுவை சிகிச்சை செய்த காலில் மிதித்தார். இதையடுத்து, டாக்டர்கள் அறிவுரையின்படி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவர் ஊன்றுகோல் உதவியுடன்தான் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான ஜிசிடி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. பின்னர், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன. கமல்ஹாசன் ஊன்றுகோல் உதவியுடன் ஜிசிடி கல்லூரிக்கு நேற்று வந்தார். பின்னர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அறைகளில் வைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ம.நீ.ம. கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரன் உடனிருந்தார்.

Related Stories: