நாட்றம்பள்ளி அருகே விவிபேட் இயந்திரம் பழுதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே விவிபேட் இயந்திரம் பழுதால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.  

திருப்பத்தூர் மாட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி வெலக்கல்நத்தம் ஊராட்சி கிட்டபையனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையத்தில் மொத்தம் 654 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்குப்பதிவு மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அப்போது, திடீரென 7.30 மணிக்கு விவிபேட் இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, தேர்தல் பணியாளர்கள் விவிபேட் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனர். இதையடுத்து, சுமார் 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. தொடர்ந்து, வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர்.

இந்தநிலையில் மதியம் 12 மணியளவில் விவிபேட் இயந்திரம் பழுதானது. இதனால், வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. மேலும், மாற்று விவிபேட் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. தொடர்ந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடத்தப்பட்டது.

இதையடுத்து, மதியம் 1.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து, வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். விவிபேட் இயந்திரம் 2 முறை பழுதானதால் மொத்தமாக சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் வாக்குசாவடி மையம் 2ல் வாக்குப்பதிவு இயந்திரம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதே பழுதடைந்தது.

தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து, வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம்பூர்: ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உமர் ரோடு நகராட்சி பள்ளியில் காலை 6.30 மணியளவில் மாதிரி வாக்கு பதிவு நடத்த வாக்குசாவடி அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அங்கு வைக்கப்படிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, வேறு வாக்குபதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடத்தப்பட்டு உரிய நேரத்தில் வாக்குபதிவு தொடங்கியது. இதேபோல் கிரிசமுத்திரம், குமாரமங்கலம் வாக்குச்சாவடிகளில் விவிபேட் இயந்திரம் பழுதானது. தொடர்ந்து, பழுதினை தேர்தல் பணியாளர்கள் சீரமைத்தனர். இதையடுத்து, உரிய நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Related Stories: