நாடு முழுவதும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு!: தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பு... கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

சென்னை: நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் தடுப்பூசி போடுவதற்கான விதிமுறைகளை எளிமையாக்குவது குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் என்பது மிகவும் வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. 2வது அலை காரணமாக கொரோனாவின் வீரியம் என்பது கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் பிரதமர் ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று மத்திய தலைமை செயலாளர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

தொடர்ச்சியாக நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனும் 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இன்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த கூட்டத்தின் போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் கொரோனா பரவலால் தமிழகத்திலும் இரவு நேர பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மேலும் தியேட்டர்கள், வணிக வளாகம், போக்குவரத்து சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. நாளைய தினம் மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: