உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் வரும் 24ம் தேதி பதவியேற்கிறார்.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கம். உச்ச நீதிமன்றத்தின் ‘கொலிஜியம்’ உறுப்பினர்களுடன் ஆலோசித்து, தனக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக இருக்கும் ஒருவரை தலைமை நீதிபதி பரிந்துரை செய்வார். தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இந்த பரிந்துரையை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரையை அளிக்கும்படி பாப்டேவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த மாதம் இறுதியில் கடிதம் எழுதியது.

    இதைத் தொடர்ந்து, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி சட்ட அமைச்சகத்துக்கு எஸ்.ஏ.பாப்டே கடந்த வாரம் பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதை பரிசீலித்த மத்திய அரசு அதை ஜனாதிபதிக்கு அனுப்பியது. அந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து நேற்று உத்தரவிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி பாப்டேவின் பதவிக்காலம், வரும் 23ம் தேதி முடிகிறது.  இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக வரும் 24ம் தேதி என்.வி.ரமணா பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். என்.வி.ரமணாவின் பதவிக் காலம் 2022, ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிகிறது.

ஆந்திராவில் இருந்து முதல்முறை

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதியான என்.வி.ரமணா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்தவர். இவரது முழு பெயர் நூதலபதி வெங்கட ரமணா. ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர், படிப்படியாக முன்னேறிய அவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 2000, ஜூனில் நியமிக்கப்பட்டார். பின்னர், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ஆந்திராவில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் நீதிபதி இவர்தான். இவர், ஆந்திர மாநில நீதித்துறையில் தனது அரசுக்கு எதிராக தலையீடுகள் செய்வதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சில மாதங்களுக்கு முன்னதாக தலைமை நீதிபதிக்கு குற்றம்சாட்டி கடிதம் எழுதினார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து என்.வி.ரமணாவை உச்ச நீதிமன்றம் விடுவித்து விட்டது.

Related Stories: