100 கோடி லஞ்சம் கேட்ட தேஷ்முக் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா தாக்கல்

புதுடெல்லி: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து, அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தார். இதற்கிடையே, தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் சிக்கிய விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எழுதிய கடிதத்தில், ‘ரெஸ்டாரன்ட், பார்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து தருமாறு போலீசாரை அமைச்சர் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார்’ என குற்றம்சாட்டினார்.

இது, மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியது. தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பரம்பீர் சிங் மற்றும் பலர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தேஷ்முக் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேஷ்முக், மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இ்தை இருதரப்பு வக்கீல்களும் உறுதி செய்துள்ளனர்.

Related Stories: