சிறையில் போலீசார் மீது மிளகாய் தூள் தாக்குதல்: 16 கைதிகள் எஸ்கேப்

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம், ஜோத்ப்பூர் மாவட்டம், பஹ்லோடி நகரில் கிளை சிறைச்சாலை உள்ளது. இதில், பல்வேறு குற்றங்களில்  தொடர்புள்ள தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த சிறையில்  நேற்று முன்தினம் இரவு  போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, தண்டனை  கைதிகளில் சிலர் தாங்கள், சிறையின் சமையல் அறையில் இருந்து திருடி வந்த  மிளகாய் பொடியை  போலீசார் மீது திடீரென வீசினர்.  கண்ணில் மிளகாய் துாள் விழுந்ததால் போலீசார் நிலை குலைந்தனர். அப்போது, கைதிகள் அவர்களை  தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்த சாவியை பறித்தனர். பின்னர், சிறை கதவை திறந்து கொண்டு தப்பினர்.   மொத்தம் 16 கைதிகள் தப்பி சென்றது உறுதியாகி இருக்கிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில்  போலீசார் தாக்கப்பட்ட இடத்தில்  காய்கறிகள் கொட்டிக் கிடந்தன. நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  கைதிகள் தங்கள் மீது காய்கறிகளையும்,  மிளகாய் பொடியையும் வீசி தாக்கியதாக தெரிவித்தனர்.  தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர். இந்நிலையில், கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக,  சிறைத் துறை போலீசார் 16 பேர்  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories: