வாணியம்பாடி அருகே தேர்தல் பணிகளால் தமிழக-ஆந்திர எல்லை சோதனை சாவடிக்கு பூட்டு-காவலர்கள் இன்றி வெறிச்சோடியது

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்ணாநகரில் தமிழக காவல்துறை சார்பில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் செல்லக் கூடிய வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து காவலர்களும் தேர்தல் பணிக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சோதனை சாவடிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் நிலையில் ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகள் கடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்திருக்கக்கூடிய நிலையில் தமிழக ஆந்திர எல்லை ஒட்டியுள்ள சோதனை சாவடியை காவலர்கள் இல்லாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.

இந்த செக்போஸ்ட்டில் பணிபுரியும் காவலர்கள் அம்பலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளனரா அல்லது தேர்தல் பணிக்காக செக்போஸ்ட்டை பூட்டிவிட்டு வேறு எங்கேயாவது சென்று விட்டனரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: