போச்சம்பள்ளி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு-வாங்க ஆளில்லாததால் ஏரியில் கொட்டும் அவலம்

போச்சம்பள்ளி : வெப்பம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் முள்ளங்கி நன்கு வளரும். இது வேகமாக வளரக்கூடிய ஒரு பயிராகும். சுமார் 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதிகமாக பூச்சி, நோய்கள் தாக்குதல் காணப்படுவதில்லை. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிகளவில் முள்ளங்கியை சாகுபடி செய்து வருகிறார்கள். போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். கடந்த வாரங்களில் ஒரு கிலோ ₹8 முதல் ₹10 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை சரிந்துள்ளது. வியாபாரிகள் வாங்க வராததால் விவசாயிகள் முள்ளங்கியை பிடுங்காமல் அப்படியே நிலத்திலேயே விட்டு உரமாகி வருகிறார்கள். சில விவசாயிகள் வந்தவரை லாபம் என்று விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர. ஆனால், வாங்க ஆளில்லாத நிலையால் விரக்திக்குள்ளாகும் விவசாயிகள் புலியூர் ஏரியில் கொட்டி சென்றனர். இதனால், ஏரி முழுவதும் முள்ளங்கி மிதந்தவாறு காணப்படுகிறது.

Related Stories: