பத்து ஆண்டுகளாக வீழ்ச்சியில் உள்ள தமிழகத்தை மீட்க அனைவரும் ஆதரவு தரவேண்டும்: சேப்பாக்கம்-துறைமுகம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட பிரசாரம்

சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானேர் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. நம்முடைய தலைவர் கலைஞர்  இந்தத் தொகுதியில் மூன்று முறை நின்று மூன்று முறையும் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற இந்த தொகுதியில் இன்றைக்கு தலைவர் கலைஞருடைய பேரனாக இருக்கும் என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார்.

அவரைச் சிறப்பான வகையில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் ஆறாம் தேதி மறந்து விடாமல் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.இன்று(நேற்று) பிரசாரத்தின் நிறைவு நாள், 7 மணியுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது. ஊடகங்களில் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவைஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அந்த அச்சத்தின் காரணமாக தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையில் இந்து, தினமணி, தினமலர், தினத்தந்தி என எல்லா பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது திமுக செய்த தவறுகள் என்று தலைப்புச் செய்திகளாக போட்டு இன்றைக்கு திமுக பெறவிருக்கும் வெற்றியை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்று அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.கடந்த பத்து ஆண்டுகாலம் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது அதைப் பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள். இன்றைக்கு தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்து மக்களை திசை திருப்ப நினைக்கிறீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. உங்களுக்கு தக்க பதிலடியை வரும் ஆறாம் தேதி மக்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.இன்றைக்கு பொய்யான செய்திகளை எடுத்து உண்மையாக நடந்து இருப்பதைப்போல அந்த விளம்பரம் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த விளம்பரத்தை பார்த்தீர்கள் என்றால் அதை விளம்பரம் போல அமைக்கவில்லை. அதை இன்றைக்கு நேற்று நடந்த செய்தியை போல தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விவரம் தெரியாதவர்கள் படித்து பார்த்தால் அதை செய்தியாக தான் படிப்பார்கள். அதை விளம்பரமாக பார்க்கமாட்டார்கள். நமக்கு அது தெரிந்ததால் விளம்பரம் என்று நினைக்கிறோம்.

நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நம்முடைய வேட்பாளர் தம்பி உதயநிதி ஸ்டாலினை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதே போல நானும் ஒரு வேட்பாளர் தான். முதல்வர் வேட்பாளர். இவர் வெற்றி பெற்றால் தான் நான் முதல்வர். எனவே தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் உதயசூரியனுக்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.இந்தத் தேர்தல் நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும். சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இது தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா பிறந்த மண். தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். மறந்துவிடாதீர்கள். மாநில உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய தன்மானத்தை இழந்து நிற்கிறோம். கடந்த ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டோம். கடந்த 10 ஆண்டுகளின் வீழ்ச்சியில் இருந்து தமிழகத்தை மீட்க நீங்கள் அத்தனை பேரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அப்போது  அவர் ேபசியதாவது:முதல்வர் முதல் கடைக்கோடி அமைச்சர் வரை அத்தனை பேரும் எல்லா துறைகளிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கரப்சன்-கமிஷன்-கலெக்சன். இதுதான் அவர்களது கொள்கை. அந்த ஊழல் பட்டியலை ஆளுநரிடம் ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மே 2-க்கு பிறகு நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அவ்வாறு வந்ததற்குப் பிறகு உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுக்கப் போகிறோம்.

Related Stories: