தொகுதியில் தொடர்ந்து எதிர்ப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை காணவில்லை: திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் செய்து வரும் இவர், வாக்கு சேகாிக்க துவங்கிய நாளில் இருந்து தொகுதியில் பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த வாரம் உலகநாதபுரம், சேதுராம்பிள்ளை காலனி ஆகிய பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது, அப்பகுதி மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை எனக்கூறி அவரிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் 9வது வார்டுக்குட்பட்ட சஞ்சய்காந்தி நகர், நாடார் தெருவில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி மக்கள் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது தொகுதியிலேயே பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவ்வப்போது தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாமல் அமைச்சர் முடங்கி இருந்தார்.இந்நிலையில் நாளை (6ம்தேதி) தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, பருப்புக்காரத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரின் தலைப்பில் காணவில்லை என்றும், அதற்கு கீழ், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 2016ல் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் 5 வருட காலமாக அவரது தொகுதியில் எங்கும் தேடியும் காணவில்லை என்றும், அதன் கீழே ஆழ்ந்த மன வருத்தத்துடன் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: