தர்மபுரி கடை வீதியில் விபத்து; லாரி மோதி மின் கம்பம் உடைந்தது: 6 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு

தர்மபுரி:  தர்மபுரி கடைவீதி சாலையில், லாரி மோதி மின்கம்பம் உடைந்து தொங்கியது. இதனால், அப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து தர்மபுரிக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒருலாரி வந்தது. நேற்று காலை 6 மணியளவில் தர்மபுரி கடை வீதி பகுதியில் அந்த லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, தனியார் பள்ளியின் வாகன நிறுத்துமிடம் அருகே ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தனர். இதனால், வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி பக்கவாட்டில் சைடு எடுத்து சென்றபோது, அங்கிருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில், மின் கம்பத்தின் மேல்பகுதி உடைந்து லாரியின் மீது விழுந்தது. உடனே, அதே இடத்தில் லாரியை நிறுத்திய டிரைவர், சம்பவம் குறித்து மின்வாரியத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

 

இதன்பேரில், விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், உடைந்து தொங்கிய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மாற்றினர். மின்கம்பம் மாற்றும்பணியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைவீதி சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இருபுறமும் பேரிகாடு அமைத்து வாகனங்கள் வராமல் தடுக்கப்பட்டது. கடைவீதி சாலை துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மாற்று வழியாக சுற்றிச் சென்றனர்.

இதனால், கடைவீதி சாலையில் 6 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால், தர்மபுரியில் சி‘நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: