பிரசாரத்தை இலைக்கட்சியினர் புறக்கணித்ததால் தனியே... தன்னந்தனியே... பாஜ வேட்பாளர் உலா

மதுரை வடக்கு தொகுதியில் பாஜ மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் நிற்பதாக இருந்தது. இதற்காக அதிமுக முக்கியப் புள்ளிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். திடீரென காலையில் கட்சியில் சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு வடக்கு தொகுதியை தூக்கிக் கொடுத்தது தலைமை. இதனால் ராம.சீனிவாசன் உட்பட பாஜ கட்சியினர் கடும் அப்செட்டில் உள்ளனர். ராம.சீனிவாசன் பிரசாரத்திலும் பங்கெடுக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் மூலம் நடந்த பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. விரக்தியில் ராம.சீனிவாசன் விருதுநகர் மாவட்ட தேர்தல் பணியை கேட்டு வாங்கி, அங்கு போய் தேர்தல் வேலை பார்த்து வருகிறார்.

இதைதொடர்ந்து இவருக்கு நெருக்கமான மற்ற பாஜ நிர்வாகிகளும் நைஸாக ஒதுங்கி விட்டனர். இருக்கும் சிலரையும் வேட்பாளர் சரவணன் சரிவர ‘கவனிக்காததால்’, அவர்களும் ஒதுங்கி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமாருக்கு தேர்தல் பணியை பார்க்க சென்று விட்டனராம். அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எட்டிக்கூட பார்ப்பதில்லையாம். அவ்வப்போது வந்து டாக்டருடன் வேலை பார்ப்பது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்கின்றனராம். மற்றபடி எல்லா இடத்துக்கும் கூட்டமின்றி தனியாகவே சென்று வருகிறாராம் பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணன். இதனால் ‘தனியே தன்னந்தனியே’ என்ற பாடல் பாடாத குறையாக விரக்தியுடன் பிரசாரம் செய்து வருகிறாராம்.

Related Stories: