எனக்காக இவ்வளவு தூரம் வந்து அமித்ஷா பிரசாரம்: எப்படி நன்றி சொல்வேன் என குஷ்பு பேட்டி

சென்னை: ‘‘எல்லா விஷயத்திலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதே ஆசை’’ என, ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் குஷ்பூ தெரிவித்தார்.சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு குஷ்பூ அளித்த பேட்டி: அமித்ஷாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்காக இவ்வளவு தூரம் வந்து பிரசாரம் செய்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் எழுச்சி அதிகமாக இருக்கிறது. செல்லும் இடமெல்லாம் நீங்கள் ஜெயித்து வர வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். இந்த இறுதிக் கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது.

காலை முதல் மாலை வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எல்லா விஷயத்திலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதே ஆசை. ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். அதேபோன்று மோடி ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெண்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாசாலையில் கடும் நெரிசல்

குஷ்பூவை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று வந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அதிமுக, பாஜ தொண்டர்கள் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் திரண்டனர். இதனால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி முதல் எல்ஐசிவரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

இதில் காலை நேரத்தில் அலுவலகங்களுக்கு வேலைக்கு சென்றோர் சிக்கிக்கொண்டனர். பிறகு போக்குவரத்து போலீசார் வந்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க அறிவுறுத்தினர். இதையடுத்து சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த நெரிசல் சற்று குறைந்தது. முன்னதாக அண்ணாசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Stories: