தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் பெயரில் வேட்பு மனு செய்த 2 பெண்கள்: பாஜ, அதிமுக தகிடுதத்தம் அம்பலம்

தாராபுரம்:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலின்போதே இவரது பெயரில் தாராபுரம் மற்றும் அலங்கியம் கிராமங்களைச் சேர்ந்த பி.கயல்விழி மற்றும் அலங்கியம் கே.கயல்விழி என்ற பெயர்களில் 2 பெண்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த 2 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனு படிவத்தில் செல்போன் எண்-9843688529 என்று ஒரே எண்ணை பதிவிட்டுள்ளனர், 2 வேட்பாளர்களின் தொலைபேசி எண்களும் ஒரே எண்தான் என தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த திமுகவினர், அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அதிமுக மற்றும் பாஜவினர் அந்த பெண்களை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திமுக வேட்பாளரின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கத்திலும், வாக்காளர்களை குழப்பும் நோக்கத்திலும் கயல்விழி என்ற ஒரே பெயர் கொண்ட அவர்களை போட்டியிட வைத்திருப்பது தெரியவந்தது. ஒரே தொலைபேசி எண்ணை 2 வேட்பாளர்களும் பதிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளது தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி தவறானது. எனவே 2 வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கலைச்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: