மகேந்திரவாடி நேரடி கொள்முதல் நிலையத்தில் குண்டு ரக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

பாணாவரம் : பாணாவரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குண்டு ரக நெல்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குப்புகல்மேடு, வெளிதாங்கிபுரம், மோட்டூர், பாலகிருஷ்ணாபுரம், சிறு வளையம், கர்ணாவூர், கல்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

      இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் சம்பா பருவ நெல் மணிகளை அறுவடை செய்து மூட்டைகளாக டிராக்டரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக தினமும் கொண்டு வந்து குவித்து இரவும், பகலும் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். சன்ன ரக நெல் கிலோ ₹19.58, காசுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக மிகக் குறைவான மூட்டைகளே  கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், வெயிலில் காய்ந்து கிடக்கும் நெல் மூட்டைகளால் எடை குறைவு ஏற்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

மேலும் குறைந்த அளவே நெல் மூட்டைகள் தாமதமாக கொள்முதல் செய்யப்படுவதால் திடீரென ஏற்படும் இயற்கை சீற்றங்களால் நெல் மூட்டைகள் சேதமாகும் அபாயம் உள்ளது. இரவும் பகலும் அங்கேயே காத்துக் கிடப்பதால் விவசாயிகளின் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் பொதுரகமான குண்டு ரக நெல் மூட்டைகளை, கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

இங்கு சன்னரக நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும், வேறு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாது, வேறு கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி  திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குண்டு ரக நெல் மூட்டைகளை குறைந்த அளவே இங்கு விவசாயிகள் கொண்டு வருவதால் கொள்முதல் செய்ய இயலவில்லை என்று பொத்தாம் பொதுவாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, அதிகாரிகள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்யவும், குண்டு ரக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: