என் மீதான குற்றச்சாட்டுகளை சைதை துரைசாமி நிரூபிக்க தயாரா?: மா.சுப்பிரமணியன் கேள்வி

ஆலந்தூர்: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் மா.சுப்பிரமணியன், திமுக தேர்தல் அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:நான், தற்போது வசிக்கும் வீட்டை என்னுடைய நண்பர் ஜம்புலிங்கம் ரூ.2.30 லட்சத்துக்கு  மேற்கூரையை மட்டும் வாங்கி கொடுத்தார். 1996ம் ஆண்டு முதல் அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன். 2005ல் வீடு இடிந்தபோது கட்டினேன். 2006ல் மேயர் தேர்தலில் நான் தாக்கல் செய்த பிரமாண பாத்திரத்தில் நான் தங்கியிருக்கும் வீட்டு மேற்கூரை மட்டுமே எனக்கு சொந்தம் என்றும், இடம் சிட்கோவுக்கு சொந்தம் எனவும் குறிப்பிட்டுள்ளேன்.

சிட்கோ நிலத்தை நான் அபகரித்து விட்டேன், என சைதை துரைசாமி கூறுகிறார்.  சாதாரண 1,100 சதுர அடி நிலத்தில் குடியிருக்கும் என் மீது சைதை துரைசாமி இவ்வாறு குற்றம்சாட்டுகிறார்.  நான் பொய்யான ஆவணங்களை வழங்கி எனது மனைவி பெயரில் நிலம் வாங்கியதாகவும் கூறுகிறார். இதை சைதை துரைசாமி நிரூபித்தால் நான்  அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். மே 2ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி அரசியலிலிருந்து விலகிவிடுவார். அவரை குறுக்கு வழியில் தோற்கடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.   

2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மேயராக இருந்த சைதை துரைசாமியிடம் வெள்ளம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காமல் சென்றவர் அவர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் உள்ளன. சைதை வரலாற்றில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மே 2ம் தேதிக்கு பிறகு சைதை துரைசாமி மீது உள்ள நில அபகரிப்பு வழக்கை சட்டபூர்வமாக கொண்டு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: