அசாமில் 2ம் கட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை பாஜ வேட்பாளர் காரில் வாக்குப் பதிவு இயந்திரம்: மறுதேர்தல் நடத்த ஆணையம் உத்தரவு

கரீம்கன்ஜ்: அசாமில் பாஜ வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால், வன்முறை வெடித்தது. அசாமில் நேற்று முன்தினம் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. ராதாபரி தொகுதிக்கு உட்பட இந்திரா எம்பி பள்ளியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரீம்கன்ஜில் உள்ள  பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், பாஜ வேட்பாளரின் காரில் வாக்குப்புதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியானது. அந்த காரை திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிமால் பசார் பகுதியில் வழிமறித்து சோதனை செய்தனர்.  

அப்போது, காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அந்த காரை அடித்து சேதப்படுத்தியது. போலீசார் அங்கு விரைந்து சென்று,  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையை கட்டுப்படுத்தினர். பின்னர், காரில் இருந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை மீட்டு பதர்கன்டி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. அதன் அடிப்படையில், ராதாபரி தொகுதிக்குட்பட்ட இந்திரா எம்பி பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேட்பாளரின் காரில் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல அனுமதி அளித்த 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘தேர்தல் ஆணையம் செயல் இழந்து நிற்கிறது. பாஜ.வின் நோக்கம் மோசமானது. ஜனநாயகத்தின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது,’ என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘இனியும் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளாவிட்டால், வாய்மூடி இருந்தால், அது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தாக முடியும்,’’ என்றார்.

Related Stories: