வருமான வரித்துறையினரை கண்டித்து நீலாங்கரை, அண்ணா நகரில் திமுகவினர் போராட்டம்

* அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு

* பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு

சென்னை: அரசியல் பழிவாங்கும் நோக்கில் திமுக தலைவரின் மகள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதை கண்டித்து நீலாங்கரை மற்றும் அண்ணாநகரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் விலவி வருகிறது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவான அலை வீசுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் திமுக 177 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. இதனால் திமுக வெற்றியை தடுக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீடு மற்றும் அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் மகன் வீடு, அலுவலகங்கள் என 8 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த வருமான வரித்துறை சோதனையை கண்டித்து திமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீடு அருகே திமுகவினர் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டின் முன்பு திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், மத்திய பாஜ அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: