சிறந்த சமூக சேவைக்கு துபாய் வாழ் தமிழ் பெண்மணிக்கு விருது அறிவிப்பு

துபாய்: பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில், “பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை”யின்  சார்பில் இந்த ஆண்டுக்கான Glass Ceiling Award, பெண்கள் தினத்தை முன்னிட்டு 50 பெண்களுக்கு வழங்கப்பட்டது. “விண்ணப்பித்த 800 பெண்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளில் வல்லுனர்களான 7 பேர் கொண்ட குழுவினர் விருதுக்கான பெண்மணிகளை தேர்ந்தெடுத்தனர்” என இந்த அறக்கட்டளையின் நிறுவனர் திவ்யா சொப்பனராஜ் தெரிவித்தார். ‘மகளிர் மட்டும்’ முகநூல் குழுமத்தின் நிறுவனர்களான வகிதா பானுவும் அவரது மகள் பெனாசிரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15க்கும் மேற்பட்ட சமூகசேவை செய்துவருகின்றனர்.

இரத்ததான முகாம், ஏழைகளுக்கான கல்வி உதவி, தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி, ஆதரவற்ற முதியோருக்கான உதவி, விவசாயிகளுக்கான உதவி, கொரோனா நோயாளிகளை காக்க மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குதல், மரம் நடுதல் (மனநலம் குன்றியோருக்கான அன்பு மலர் பள்ளி) உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் “மகளிர் மட்டும்” முகநூல் குழுவினர், இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, இதன் நிறுவனர் வஹிதா பானுக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவர் துபாயில் வசிப்பதால், குழும உறுப்பினர்களான மஹாலக்ஷ்மி முருகேசன், ஜஸிரா ஆஸாத், ரோஸ் விஸ்வநாதன் மற்றும் உமா இந்த விருதை அவர் சார்பில் பெற்றுக்கொண்டார்கள்.

பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில், வறுமையால் வாடும் 10 பெண்மணிகள் தத்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளித்து சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல் மேலும்  20 பெண்மணிகளுக்கு சுயதொழில் தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண்மணியை “மகளிர் மட்டும்” குழுவினர் தத்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: