அதிமுக பணத்தை வாரி இறைத்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் திருமகன் ஈவேரா

* தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனான உங்களது அரசியல் பயணம் எப்படி இருக்கும்?  தேர்தல் முடிந்த உடன் எனது அரசியல் வேகம் எப்படி இருக்கும் என்று தொகுதி மக்களே சொல்வார்கள். மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு அரசியலில் செயல்படுவேன். அதற்கு தகுந்தவாறே என்னுடைய தற்போதைய பிரசாரமும் செல்கிறது. தொகுதிக்குள் செல்லும்போது பல்வேறு பிரச்னைகளை சொல்கிறார்கள். அதை எல்லாம் கவனித்து வருகிறேன். அவற்றை பட்டியல் போட்டு வருகிறேன். வெற்றி பெற்ற உடன் அதை நிறைவேற்றுவதற்காக அதிகமாக உழைப்பேன்.

* சென்னையில் வசிக்கும் நீங்கள் சொந்த ஊரான இந்த தொகுதியை தேர்வு செய்தது ஏன்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சென்னையில் இப்போது தான் வசிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான். 2014ம் ஆண்டுக்கு பின்பு தான் காங்கிரசில் மாநில பொறுப்பு கிடைத்தது. அதன் பின்பு தான் நான் சென்னை வந்தேன். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தபோதும் நான் ஈரோட்டில் தான் இருந்தேன். அதன் பின்பு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தலைவராக பதவி கிடைத்தது. அதற்கு பிறகு தான் சென்னையில் அதிக நாட்கள் இருக்க வேண்டியதிருந்தது. சிறு வயதில் இருந்து நான் வளர்ந்ததெல்லாம் பெரும்பாலும் ஈரோடு தான். இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.

* எதிர்த்து நிற்கக்கூடிய அதிமுக வேட்பாளரும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். அவருக்கு எந்த வகையில் போட்டியை ஏற்படுத்துவீர்கள்?

அரசியலில் போட்டி என்று சொல்ல வேண்டுமானால் நபர் முக்கியம் கிடையாது. அதிமுகவா?, திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சியா? என்று தான் பார்க்க வேண்டும். பாஜவின் பினாமி அரசாக தான் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி செயல்பட்டது. அப்படிப்பட்ட அதிமுக சின்னத்தில் தான் அவர் நிற்கிறார். தமிழகத்தின் உரிமைகள் பலவற்றை மறுத்த மத்திய பாஜ அரசை எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு மவுன அரசாகவே அதிமுக அரசு செயல்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக தான் அதிமுக அரசு இருந்தது. இதனால் தான் தமிழகம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க ேவண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கான பதிலை தமிழக மக்கள் எப்படி கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்களோ அதே பதில் தான் எனது தொகுதியிலும் இருக்கும்.

* மேற்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் வளம் கொழிக்கும் துறையை வைத்திருந்தவர்கள். பணத்தை வாரி இறைக்கும் நிலை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பீர்கள்?

இதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறினார்கள். அதையும் மீறி திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் தீர்ப்பு தான் வெற்றியை முடிவு செய்யும். எனவே எங்கள் வெற்றியை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் என்று முடிவு செய்துவிட்டனர். பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான அனைத்து பிரச்னைகளுக்கும் அவர் தான் தீர்வு ஏற்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் அது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

Related Stories: