ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையை நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா...! பேறுகால நிதியுதவி கட்டாயம் உயர்த்தப்படும்: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பரப்புரை

தேனி: ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையை ஜெயலலிதா நிலை நிறுத்தியுள்ளார் என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது.

சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

இதனால் போடி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், போடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வாக்குறுதியின்படி பேறுகால நிதியுதவி கட்டாயம் உயர்த்தப்படும். அதிமுக வெற்றி பெற்றால், 100 நாள் வேலை நாள் 180 நாட்களாக உயர்த்தப்படும். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையை ஜெயலலிதா நிலை நிறுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: