திறந்திருந்த கடைகள் மீது கல்வீசி தாக்குதல்!: கோவையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பின் போது வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின் போது அங்கு கலவரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவை பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெறும் நிலையில் அதற்கான பிரச்சாரம் அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அவரை வரவேற்கும் விதமாக இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் புளியகுளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றார்கள். ஒப்பணக்கார வீதியை அடைந்து வலதுபுறமாக திரும்பும் போது, அங்கு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதைப்பார்த்த, இருசக்கர வாகன  பேரணியில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி இஸ்லாமியர்கள் கடை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜகவினர் மற்றும் அங்கு கடை வைத்திருந்தவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் முதல்வர் ஆதித்யநாத் வரவேற்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: