கடையை அடைக்க சொல்லி பாஜவினர் கல்வீச்சு: கோவையில், யோகி ஆதித்யநாத் பேரணியில் பதற்றம், பரபரப்பு

கோவை: கோவையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பாஜ பிரசார பேரணியின்போது, கடையை அடைக்க சொல்லி பா.ஜ. பிரமுகர் கல் வீசியதால் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று விமானம் மூலமாக கோவை வந்தார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். புலியகுளம் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத் இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்றார். புலியகுளத்தில் இருந்து ராஜ வீதி வரை இவர் பேரணியில் பங்கேற்றார்.

யோகி ஆதித்யநாத் வருகைக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெற்கு தொகுதியில் அவர் பிரசாரம் செய்யக்கூடாது, எங்களிடம் ஓட்டு கேட்கவேண்டாம், அவர் திரும்பி செல்லவேண்டும் எனக்கூறி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து நகரில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, இஸ்லாமியர்கள் சிலர், ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் வீதி, பெரிய கடை வீதிகளில் கடைகள் மூடினர். சில இடங்களில் போலீசாரே பாதுகாப்பு காரணங்களுக்காக கடைகளை கட்டாயப்படுத்தி மூட வைத்தனர். சில மணிநேரத்தில், யோகி ஆதித்யநாத் பேரணி, சுங்கம், அரசு மருத்துவமனை வழியாக டவுன்ஹால் வந்தபோது பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். அந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் சிலர் மெயின் ரோட்டை கடக்க முயன்றனர். அவர்களை பார்த்து பேரணியில் பங்கேற்ற நபர்கள் சிலர் கையை காட்டி ஏதோ கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் எதிர்கோஷமிட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார், அங்கே இருந்தவர்களை வெளியேற்றி பேரணியில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்து கொண்டிருந்தனர். அப்போது பேரணியில் தலையில் காவி துணி அணிந்த நபர், கடைகளை அடைக்க சொல்லி பெரிய கல்லை எடுத்து செருப்பு கடைக்குள் வீசினார். கையில் மற்றொரு செங்கல்லை எடுத்து மீண்டும் வீச முயன்றார். கல் வீச்சால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல் வீச்சு வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலானது. இச்சம்பவம் கோவையில் பதற்கத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் புகார் தரப்பட்டது.

Related Stories: