அதிமுக கோஷ்டி மோதல் உச்சகட்டம் தேர்தலுக்கு அளித்த பணத்தை செலவழிக்காமல் சுருட்டும் கட்சியினர்: கொளத்தூர் தொகுதியில் வேட்பாளர் டென்ஷன்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக பாக பொறுப்பாளர்கள் தேர்தல் பணத்தை செலவிடாமல் சுருட்டிய சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆதிராஜாராம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை வேட்பாளராக அறிவித்தது முதலே அதிமுகவில் பலத்த சர்ச்சை எழுந்தது. தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அதையும் மீறி ஆதிராஜாராம் வேட்பாளராக கொளத்தூரில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் 2, 3 நாட்கள் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட சில நிர்வாகிகள் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளரோடு  சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டனர். அதன் பின்பு அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

தற்போது, கொளத்தூர் பகுதியில் வலம் வரும் அதிமுக நிர்வாகிகள் சிலர் பணம் சுருட்டும்  வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் குறிப்பிட்ட ஒரு பகுதி செயலாளர், பாக பொறுப்பாளர்களுக்கு சரியாக பணத்தை பிரித்து கொடுக்காமல் அதில் பாதியை பதுக்கிவிட்டார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வருகையின்போது ஆட்களை அழைத்து வர தலைக்கு 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ஒரு பாக பொறுப்பாளர் 50 பேரை அழைத்து வந்துள்ளார்.  ஆனால், அவருக்கு 30 பேருக்கு உண்டான பணம் மட்டுமே தரப்பட்டுள்ளது. மீதி பணத்தை பகுதி செயலாளர் தரமுடியாது என கூறியுள்ளார்.

பிரசாரத்தின்போது வேட்பாளருடன் 30க்கும் குறைவானவர்கள் மட்டுமே செல்கின்றனர். அதுவும், சிறுவர்கள் ஏராளமானோர் செல்கின்றனர், பள்ளிக்கூடங்கள் இயங்காத காரணத்தினால் சிறுவர்களுக்கு 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை, வைத்து வீடு வீடாக துண்டு பிரசுரங்களை கொடுக்க செய்கின்றனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது மேலிடத்திலிருந்து இன்னும் முழுமையாக பணம் வரவில்லை. இன்னும் 2 தினங்களில் வந்துவிடும் என்று கூறுகிறார்கள். அப்படி வந்துவிட்டால் கொளத்தூர் தொகுதியில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு டெபாசிட் வருகிற அளவுக்கு பொதுமக்களை செட் செய்துவிட்டு தொகுதியை விட்டு கிளம்பலாம் என முடிவு செய்துள்ளோம். இதற்கு மேல் இந்த தொகுதியில் செலவு செய்ய முடியாது. அப்படி செலவு செய்தாலும் வெற்றி பெற முடியாது என்பது தெரிந்துவிட்டது. எனவே பணம் செலவு செய்யும் விஷயத்தில் வேட்பாளர் கறாராக உள்ளார் என தெரிவித்தனர்.

Related Stories: