கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி: இலவச தரிசன டிக்கெட் குறைப்பு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

திருமலை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்படும். பக்தர்கள் அதிகம் கூடும் அன்ன பிரசாத கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறை, தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா ஆகிய இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

திருமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கொண்டு வர வேண்டும். அறைகள் ஒதுக்கீடு செய்ய கூடிய மையங்களில் உடல் வெப்பநிலை கணக்கிடக்கூடிய தர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்யப்படும். தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறை மற்றும் கோயிலுக்குள் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 13ம் தேதி யுகாதி ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 6ம் தேதி யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு) முன்னிட்டு கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம், 8ம் தேதி அன்னமாச்சார்ய நினைவு தினம், 9ம் தேதி பாஷ்யகார்ல உற்சவம் ஆகியவை நடைபெறும். 18ம் தேதி ராமானுஜ ஜெயந்தி, 21ம் தேதி ராமநவமி ஆஸ்தானம், 24 முதல் 26ம் தேதி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: