கட்சிக்காரணும் மதிக்கல... மக்களும் மதிக்கல... ‘பியூஸ் போன பல்ப்’ ஆக அதிமுக வேட்பாளர்கள்: அமைச்சர் மீது அதிருப்தியால் முடங்கிய நிர்வாகிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 ஆண்டு காலத்தில் பொதுமக்களுக்கு எதுவும் செய்யாத காரணத்தால் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இதன்பிறகு 5 ஆண்டு காலம் தொகுதியில் எந்த பணிகளும் செய்யாமல் அமைதியாக இருந்தார். தற்போது மேலிடத்தில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை நகர் மற்றும் புதுக்கோட்டை ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எட்டி கூட பார்ப்பதில்லை. பொதுமக்கள் வரவேற்பு இல்லாத காரணத்தால் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் சேருவது இல்லை. ஆளும் கட்சியின் நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினர் தான் உள்ளனர். ஆலங்குடி: ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொந்த கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக முதல்வர் பிரசாரத்திற்கு வந்தபோது தங்கவேலுவை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிமுக தலைமை இதை கண்டு கொள்ளவே இல்லை.

தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து வேட்பாளரை மாற்றம் செய்யவில்லை. இதனால் தொண்டர்கள் அனைவரும் பிரசாரத்திற்கு வராமல் ஒதுங்கி விட்டனர். இதனால் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் அவர் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அறந்தாங்கி: அறந்தாங்கி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தற்போது அதிருப்தி அதிமுக சிட்டிங் எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் ராஜநாயகம் போட்டியிடுகிறார். அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளராக கடந்த 4வது முறையாக சகோதரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதால், அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிணக்கால் அறந்தாங்கி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கட்சியில் குழப்பங்கள் காரணமாக தொகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.

இதனால் இருவர் மீதும்‘ மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ராஜநாயகம் வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை வழிமறித்து தங்கள் கிராமத்திற்கு வாக்குகள் கேட்டு வரவேண்டாம் என விரட்டியடிக்கின்றனர். கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயபாரதி உதயகுமார் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கறம்பக்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஒன்றியங்களை அதிமுக தலைமை மாவட்ட அமைச்சர் மூலமாக திடீரென மூன்றாக பிரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒன்றியங்களை திடீரென்று பிரித்தது அதிமுகவினரிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலையில் இறங்கி உள்ளனர்.

திருமயம்: திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வைரமுத்து போட்டியிடுகிறார். தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் வைரமுத்துவை கண்டிப்பாக தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் முடிவு செய்து, சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களம் இறக்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதில் ஆளும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை பார்க்கும் அதிமுகவினர் ஒரு மறுபக்கம் கட்சிக்காரர்களே மதிக்கல... ஒன்னொறு புறம் மக்கள் மதிக்கல.. சீட், பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் உள்ளடி வேலைகள் அரங்கேற்றம் என பலமுனை தாக்குதலால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் ‘பியூஸ் போன பல்ப்’ ஆக சுற்றி வருவதாக அதிமுகவினரே கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: