மக்கள் நல திட்டங்களை மேற்கொள்வேன்: மா.சுப்பிரமணியன் பிரசாரம்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜோதிராமலிங்கம் நகரில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கங்கையம்மன் கோயில் தெருவில் தொடங்கி முத்தமிழ் நகர், கங்கையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த தொகுதியில் நான் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திய சமூகநலத் திட்டங்கள், பசுமை சைதை, கலைஞர் கணினி மையம், பிளஸ் 2 வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு  மேல் பெற்ற மாணவர்களின் மேற்படிப்பு குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மாநில அளவில் வேலைவாய்ப்பு முகாமை  நடத்தியது,

கோதண்டராமர் கோயில் குளம் தூர்வாறியது, குடிநீர் பஞ்சம்  ஏற்பட்டபோது 24 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கியது, கொரோனா காலத்து  உதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து பல லட்சங்கள் செலவில் மக்கள் பணிகளை செய்துள்ளேன். மக்கள் நல பணிகள் தொடர மீண்டும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். திமுக சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத்,  மு.எம்.சி.வில்லியம்ஸ், காங்கிரஸ் கோகுல், செல்வக்குமார் விசிக ஜேக்கப், பாண்டுரங்கன், மமக ஜாபர், மதிமுக ப.சுப்பிரமணி,  பகுதி அவை தலைவர் களக்காடி எல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: