தாராபுரத்தில் அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லி சென்றுள்ளார்: மோடியின் பொய் பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது..! ஆலங்குளத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

நெல்லை: தென்காசி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆலங்குளம் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடாருக்கு கை சின்னத்திலும், கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கருக்கு ஏணி சின்னத்திலும் ஆதரவு கேட்டு ஆலங்குளம் காமராஜர் சிலையருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழகத்திற்கு இன்று மோடி வந்து சென்றுள்ளார். வழக்கம்போல் பேச வேண்டியதை அவர் பேசி சென்றுள்ளார். ஏதோ மோடி மஸ்தான் வேலையைப்போல் பொய் பேசி சென்றுள்ளார்.

இந்த மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது. பிரதமர் மோடியால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டாவது தமிழகத்தில் வர முடிந்ததா? அந்த நினைவு இருக்கிறதா? இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்பதால் ஜெயலலிதாவை பற்றி பேசிச் சென்றுள்ளார். இதே மோடி கடந்த 2014, 2016ல் ஜெயலலிதாவை பற்றி எப்படி பேசினார். அப்போது அந்த அம்மாவை பற்றி ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவை அரசியலை விட்டே ஒழிக்க வேண்டும் என்றார். அதற்கு ஜெயலலிதா மோடியா, இந்த ேலடியா என்றார். இதெல்லாம் தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

இப்போது தமிழக சட்டமன்றத்தில் 1989 மார்ச் 25ம் தேதி திமுக ஆட்சியில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக அப்பட்டமான குற்றச்சாட்டை சுமத்தி சென்றுள்ளார். அன்று தலைவர் கலைஞர் முதலமைச்சர். அன்றைய நாள் சட்டமன்றத்தில் பட்ெஜட் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்ய முடியாமல் போனால் ஆட்சிக்கூட போய்விடும். அன்று கலவரத்தை நடத்த திமுக முயற்சிக்குமா. எனவே அபாண்டமான மிகப்பெரிய பொய்யை மோடி கூறிச் சென்றுள்ளார். இது மக்களுக்கு நன்றாக தெரியும். அன்று சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் திருச்சி எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர். அப்போது அவர் அதிமுகவில் இருக்கிறார். அதே மார்ச் 25ம் தேதி சட்டமன்றத்தில் என்ன நடந்தது.

திமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக நடந்தது நாடகம் என்பதை திருநாவுக்கரசர் வருத்தத்துடன் பேசிய பேச்சு சட்டசபையின் அவைக்குறிப்பில் இருக்கிறது. நான் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் திருநாவுக்கரசரின் சட்டசபை அவைக்குறிப்பு பேச்சை நாளைக்கே மோடிக்கு அனுப்பி வைக்கிறேன். இதற்கு மோடி என்ன பதில் சொல்ல போகிறார். பிரதமர் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?. அவரது கட்சியில் மூத்த தலைவராக சுப்பிரமணிய சுவாமி இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது. வரலாற்றை நான் சொல்கிறேன். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகா முகத்தில் திராவகம் வீசியது யார் என்பதை சுப்பிரமணிய சுவாமியை கேளுங்கள். மோடி மீண்டும் மீண்டும் பொய்யை கூறி வருகிறார். பிரதமராக இருப்பவர் சிந்தித்து பேச வேண்டும்.

தாராபுரத்தில் எடப்பாடி பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்கிறார். அவர் வலதுபுறமும், இவர் இடதுபுறமும் இருக்கிறார். யாரை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்கள். இங்கு உங்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னரை கேளுங்கள். முதல்வர் மீதும், அமைச்சரவையில் இருக்கும் கடைசி அமைச்சர் வரை என்னென்ன ஊழல் செய்துள்ளார்கள் என புள்ளி விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கவர்னரிடம் புகார் தெரிவித்து உள்ளோம். நான் ஏதோ சும்மா சொல்லவில்லை. நான் கலைஞரின் மகன். ஆதாரத்துடன் புகார் கொடுத்து விட்டு சொல்கிறேன். கவர்னரிடம் கேட்டு வாங்கிப் பாருங்கள் தெரியும். சட்டம் ஒழுங்கில் சிறந்துள்ளதாக மோடி கூறியுள்ளார்.

ரவுடிகளையும், கேடிகளையும் பாஜவில் சேர்த்துள்ளனர். இதுதான் சட்டம், ஒழுங்கா, நீங்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 ேகாடி பேருக்கு வேலை தருவேன் என்றீர்கள். யாருக்காவது கொடுத்தீர்களா?. அது மட்டுமல்ல மீண்டும் உங்களை நான் கேட்கிறேன். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்றீர்கள். ஒரு 15 ஆயிரம் கொடுத்து உள்ளீர்களா, இல்லை ரூ.1500, ரூ.150, ஏன் 15 ரூபாயாவது கொடுத்ததுண்டா. அதற்கு வக்கில்லை. 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி அவை அனைத்தையும் வங்கியில் போடுங்கள் என்று சொன்னீர்கள். மக்கள் பணம் அனைத்தையும் பிடுங்கியதுதான் மிச்சம். மக்களுக்கு ஏதாவது கொடுத்தீர்களா, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவேன் என்றீர்கள்.

செய்தீர்களா. இன்று டெல்லியில் விவசாயிகள் 125 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேச தெம்பு, திராணி இருக்கிறதா? அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதைப்பற்றி கவலைப்படாத ஆட்சியாக மத்திய அரசு இருக்கிறது. அவர்களுக்கு எடுபிடி ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது. நானும் ஒரு விவசாயி என்று கூறுகிறார், பச்சைத்துண்டு போட்டுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம் செய்துள்ளார். இவர் முதல்வராக இருப்பது மானக்கேடு. இவர் இந்த பதவிக்கு எப்படி வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஊர்ந்து வந்தார் என்று கூறினால் அவருக்கு கோபம் வந்து விடுகிறது. அதற்கு பாம்பா, பல்லியா என்று கேட்கிறார். பாம்பு, பல்லிக்கு இருக்கும் விஷம் குறைவு. துரோகத்திற்கு விஷம் அதிகம். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை புரோக்கர், தரகர் என்று விமர்சிக்கிறீர்கள். அடுத்து 2ம் தேதி பிரசாரத்திற்காக மோடி தமிழகம் வரப்போகிறார். அப்போது எனது கேள்விக்கு மோடி பதில் சொல்ல வேண்டும். அவர் பதில் சொல்லவில்லை என்றால் மக்கள் 6ம் தேதி பதில் தெரிவிப்பார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

காமராஜருக்கு புகழ் சேர்த்தவர் கலைஞர்

ஆலங்குளத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது எதிர்த்துக் குரல் எழுந்தது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர், உடல் நலிவுற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த காமராஜரை சந்தித்து நான் ராஜினாமா செய்யவா என்றார். அதற்கு காமராஜர், கலைஞரிடம் தமிழகத்தில் மட்டும்தான் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. எனவே ராஜினாமா செய்ய வேண்டாம் என்றார். சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர் சூட்டினார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர், ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டம் என காமராஜருக்கு புகழ் சேர்த்தவர் கலைஞர் என்றார்.

குமரியை புறக்கணித்ததாக முதல்வர் வாக்குமூலம்

கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழியில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு வந்தபோது இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அதிமுக உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் திட்டங்கள் எல்லாம் நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரிக்கு வரவில்லை என்று பேசியுள்ளார். நினைத்து பாருங்கள், அவர் முதலமைச்சர், ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தை புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்கணுமா வேண்டாமா? அவரே வாக்குமூலம் கொடுக்கிறார். அவரை முதல்வராக உட்கார வைக்கலாமா? என்பது எனது கேள்வி.  

அவரை தேர்ந்தெடுத்த இடைப்பாடிக்கே அவர் ஏதும் செய்யவில்லை. இங்கு வந்து ஸ்டாலின் பொய் சொல்கிறார், எந்த சரக்கு பெட்டகமும் அமைக்கப்போவது இல்லை, ஸ்டாலின் சொல்வதை நம்பாதீர்கள் என்றார்.மிஸ்டர் பழனிசாமி அவர்களே, நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் இருப்பது ஆதாரம், ஆதாரத்துடன் வந்துள்ளேன். 20.2.2021 அன்று அதிகாரபூர்வமான மத்திய அரசின் துறைமுக விளம்பரம் பத்திரிகையில் வந்துள்ளது.  சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட், சிவில் இன்ஜினியரிங் டிபார்ட் மென்ட் விளம்பரம் தெளிவாக வந்துள்ளது. இதனை கூட தெரியாத முதல்வர் உள்ளார். அப்படிப்பட்ட முதல்வர் ஆள தகுதியுள்ளவரா? என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

Related Stories: