சென்னை டிபிஐ வளாகத்தில் பரபரப்பு தொடக்க கல்வித்துறை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்; டெண்டர் முறைகேடுகளை மறைக்க எரிப்பா? சதியா என போலீசார் விசாரணை

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறை இயக்கக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முக்கிய கோப்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது. விடுமுறை அன்று நடந்ததால் திட்டமிட்ட சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வித்துறை இயக்ககம்(டிபிஐ) வளாகம் இயங்கி வருகிறது. தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு 2 மாடி கொண்ட அலுவலக கட்டி உள்ளது. தொடக்க கல்வித்துறையின் அனைத்து ரகசிய கோப்புகள், நிதி, நிர்வாகம், டெண்டர் உள்பட பல்வேறு  ஆவணங்களும் இந்த கட்டிடத்தில் தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் டிபிஐ வளாகத்தில் செக்யூரிட்டிகள் தவிர அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தொடக்க கல்வித்துறை இயக்கக கட்டிடத்தின் முதல் தளத்தில் கரும் புகை வெளியேறியது. இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்து செக்யூரிட்டிகள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கட்டிடத்தின் முதல் மாடி முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின் படி எழும்பூர், கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கட்டிடத்தின் முதல் தளத்திற்கு வீரர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக தண்ணீரை பீச்சி அடித்து 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து தொடக்க கல்வித்துறைக்கான அனைத்து கோப்புகள் மற்றும் முக்கிய பில்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்கக அதிகாரிகள் அளித்த புகாரின் படி நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் தொடக்க கல்வித்துறையின் கோப்புகள் பராமரிக்கப்பட்டு வந்த கட்டிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், ஊழலை மறைக்க யாரேனும் திட்டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தில் நடந்த இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: