சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!!

விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் குற்றவாளி என விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1991 மற்றும்  1996-ம் ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது சின்ன சேலம் எம்.எல்.ஏ.வாக பரமசிவம் இருந்தார். இதற்கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைதண்டனை நீட்டிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் அவர் தனது மகன்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: