ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தகோரி லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் வழக்கு: ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: இந்திய வங்கிகள் சங்கத்தின் 11வது ஊதிய ஒப்பந்தத்தை லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அமல்படுத்தும்படி, டிபிஎஸ் வங்கிக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களுக்கு அவர்கள் பெற்று வந்த ஊதியத்தையே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 11வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, லட்சுமி விலாஸ் வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றி, 2019ம் ஆண்டு ஓய்வு பெற்ற எழிலரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இது சம்பந்தமாக அளித்த மனுவை பரிசீலிக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதால், தனக்கான ஓய்வூதிய உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், டிபிஎஸ் வங்கிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: