பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சமமாக ரோடு அமைக்கும் பணி

பேராவூரணி : பேராவூரணி நீலகண்ட பிள்ளைாயர் கோயில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சமமாக ரோடு அமைக்கும் பணி தினகரன் செய்தி எதிரொலியால் நடக்கிறது.காரைக்குடி-திருவாரூர் இடையே அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2012ம் ஆண்டு, பேராவூரணி வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. ரயில்வே மேம்பால பணிகள் பெரும்பாலான இடங்களில் முடிவடையாததால் ரயில் போக்குவரத்து துவங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் எதிரே முடப்புளிக்காடு செல்லும் ரயில்வே கேட் என் 120 பாதையில் தண்டவாளங்கள் சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் அதை கடந்து செல்லும் பெரும்பாலோர் சறுக்கி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. கீழே விழும்போது பின்னால் வரும் நான்கு சக்கர வாகனம் மோதினால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. நேற்று முன்தினம் தண்டவாள பாதையை கடக்கையில் வாகனம் சறுக்கி பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது. இது குறித்து ரயில்வே பொறியாளர்கள் ரயில்வே கேட் பாதையை ஆய்வு செய்தனர். பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (27ம் தேதி) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: