சிபிஐ, மத்திய அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மீது நீதி விசாரணைக்கு உத்தரவு: கேரள அரசு அதிரடி முடிவு

திருவனந்தபுரம்: சிபிஐ  உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது,  வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளை சிபிஐ, மத்திய அமலாக்கத்  துறை, சுங்க இலாகா உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.  இவை கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு  முட்டுக்கட்டை போடுவதாக முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டி வருகிறார். டாலர் கடத்தல் வழக்கில் இவரையும் சேர்க்க சதி செய்ததாக, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கேரளாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக சிபிஐ உள்பட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு  எதிராக நீதி விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.  திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று நடந்த  அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி மோகனன் தலைமையில் இந்த விசாரணைக் கமிஷன்  அமைக்கப்பட உள்ளது. தற்போது, தேர்தல் நடைமுறை சட்டம் அமலில் இருப்பதால்  இதற்காக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: