வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவிய வங்கதேசம், 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்து ‘ஒயிட்வாஷ்’ ஆனது. நியூசி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் 2 ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. முதலில் களம் கண்ட நியூசி. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்தது. நடப்புத் தொடரில் அறிமுகமான டெவோன் கான்வே 126 ரன் (110 பந்து, 17 பவுண்டரி), டாரில் மிட்செல் 100* ரன் (92 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.