பங்குனி பிரமோற்சவ பெருவிழா: மூவலூர் மார்க்க சகாய சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம்  மூவலூரில் பிரசித்தி பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத  மார்க்கசகாய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும்  பங்குனி பிரமோற்சவ பெருவிழா பிரமாண்டமாக நடைபெறும். இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 28ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை, யாகசாலை பூஜைகள், மாலை நேரத்தில் பஞ்சமூர்த்தி சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருநாளான நாளை (27ம் தேதி, சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை காலை 5.30 மணிக்கு மேல் கோபூஜை, யாகபூஜைகள், சுவாமி, அம்பாள் சிறப்புஅபிஷேக ஆராதனை யாகவிக்‌ஷன்யம் பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு மேல் ரத பிரதிஷ்ட்டையும்,  தேருக்கு சுவாமி அம்பாள் எழுதருளும் நிகழ்ச்சி நடக்கிறது.  மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் முக்கிய வீதிகளில் வலம் வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் நடராஜர் சுவாமி திருத்தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இக்கோயிலில் மூலவராக மார்க்கசகாயேஸ்வரர் உள்ளார். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரும் சிவபூஜை செய்த ஸ்தலம். வழித்துணைநாதர் இதய நோய் தீர்த்து அருளிய தலமாகும். இறைவன் தன்னைத்தானே பூஜித்து இக்கோயிலில் சதாசிவமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிப்பலர் என்ற அரசன் தான் செய்த முற்பிறவி பாவத்தினால் பிரம்மஹத்தி தோஷம் அடைந்து அப்பாவம் நீங்க புன்னை வனத்தில் உள்ள வழிகாட்டும் வள்ளலை தரிசித்து  ேகாயிலுக்கு வடதிசையில் உள்ள காவிரி தீர்த்தத்தில்  நீராடி பிப்பலர் முக்தி பெற்ற தலம்.

 துர்க்கை பரமேஷ்வரி மகிஷாசுரணை வதம் செய்து அக்கோர ெசாருபம் மாற இக்கோயிலில் இறைவனிடம் வேண்டி தவம் செய்து இத்தலத்தின் பின்புறம் உள்ள துர்கா புஷ்கரணியில் நீராடி சவுந்தரிய வடிவம் பெற்று பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் இத்தல இறைவனை திருக்கல்யாணம் புரிந்து சௌந்தரநாயகியாக அவதரித்த  ஸ்தலமாகும். மேலும் இக்கோயில் கொடிமரத்தின்  தென்முகத்தில்  தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நான்கு முனிவருடன் காட்சி தருவதால் இத்தலம் குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரதோஷ காலங்களில் மிகச் சிறப்பாக நந்தி தேவருக்கு அபிஷேகமும், பிரதோஷநாதர் பிரகார வலமும் நடைபெறுகிறது.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள  வைத்தியநாத சுவாமியை  போலவே இம்மூவலூர்  கோயிலில் உள்ள  மார்க்கசகாயேஸ்வரர் சுவாமிக்கு வில்வத்தால் அர்ச்சனை  செய்து அவ்வில்வத்தை நீரில் இட்டு அந்நீரை பருகுவதன் மூலமும், அர்த்தசாம  நேரத்தில் செய்யப்படும் அபிஷேக பாலை அருந்துவதன் மூலமும் இதய நோய் தீரும்  என்பது நம்பிக்கை. இத்தகைய புகழ்பெற்ற இக்கோயிலில்  சிவசக்தியை வழிபட்டு, சிவானந்த பெருவாழ்வு பெற பக்தர்கள் அனைவரையும் பங்ேகற்கும்படி  கோயில் செயல் அலுவலர் பா.ஞானசுந்தரம், தக்கார் மதியழகன் மற்றும் கோயில் நிர்வாகம், கிராம மக்கள், உபயதாரர்கள், அனைத்து வழிபாட்டு மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Stories: