வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கியது ஏன்?.. பொதுமக்கள் கேள்வியால் பரிதவிக்கும் அமைச்சர்கள்

கோவை: வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5% உள் ஒதுக்கீடு குறித்து பிரச்சாரத்திற்கு செல்லும் அமைச்சர்களிடம் பிற சமூகத்தினர் கேள்வி எழுப்புவது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் திரு வேலுமணியிடம் வன்னியர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கியது ஏன்? என வாக்காளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்; அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி சமாளித்தார். சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளரும் அமைச்சகருமான ஏ.ஆ.ராஜலெட்சிமிக்கு முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எதிர்ப்பு எழுந்த நிலையில் தென்காசி தொகுதிக்கும் அது தற்போது பரவி உள்ளது.

தென்காசி தொகுதியில் போட்டியிடும் தற்போதையை சட்டமன்ற உறுப்பினர் திரு செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் ஊத்துமலை அடுத்த விரணம் கிராமத்திற்கு நேற்று பிரச்சாரம் செய்ய சென்ற போது அவருக்கு முன்பாக அக்கிராமத்துக்குள் நுழைந்த அதிமுக வாகனங்களை கற்களை வீசியும், கருப்பு கொடி காட்டியும், ஊருக்குள் வர விடாமல் விரட்டி அடித்தனர். ஏற்கனவே தேனி மாவட்டம் போடி தொகுதியில் துணை முதல்வர் திரு பன்னீர்செல்வம் பிரச்சாரத்துக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. திருமங்கலத்தில் அமைச்சர் திரு உதயக்குமார் பிரச்சாரத்துக்கு சென்ற இடத்திலும் எதிர்ப்பு கிளம்பியதால் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என அவர் கூறினார். 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் திருமதி விருத்தாம்பிகை டாக்டர் ராமதாஸிடம் இருந்து வன்னியர் சங்கத்தையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுப்பதே முதல் பணி என்று கூறினார். அதற்காக பாமக போட்டியிடும் 23 தொகுதிகளும் அக்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.,

Related Stories: