தோல்விகளை மாணவர்கள் வெற்றிக்கான படிகளாக்கி கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

தங்கவயல்: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோல்விகளை வெற்றிகளுக்கான படிகளாக்கி கொள்ள வேண்டும் என்று தங்கவயலில் நடந்த  பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தி பேசினார். தங்கவயல் பி.இ.எம்.எல். சம்ராம் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தேசிய கட்டுமான ஆராய்ச்சி மைய தலைவரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவன துணை தலைவரும், முன்னாள் இஸ்ரோ இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அவர் பேசியதாவது: ‘‘தங்கவயலுக்கு முதன் முறையாக வருகிறேன். தங்கள் படிப்பை முடித்து பட்டம் பெற மாணவர்கள் வந்துள்ளனர்.

அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் தான் இது. உங்கள் பாட படிப்பு முடிந்து போனாலும் , படிப்பதை எப்போதும் நிறுத்தாதீர்கள். இன்றைய உலகம் கடுமையான போட்டிகளும் சவால்களும் நிறைந்த உலகம். ஒவ்வொரு சவாலுக்கும் பின்னால் நாணயத்தின் மறுபக்கம் போல் மற்றொரு வாய்ப்பு கிட்டும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று என்ற பெரும் நெருக்கடியை சமாளித்தோம். தோல்விகளே வெற்றியின் படிகளாக பயனளிக்கும். ரஷ்யா 9 முறை முயற்சி செய்தது.

அமெரிக்கா ஐந்து முறை முயற்சி செய்தது. சீனா , ஜப்பான் ஆகியவை பல முறை முயற்சி செய்தனர். ஆனால் இந்த நாடுகளின் தோல்விகளில் இருந்து பாடம் கற்ற நாம் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோளை அனுப்பி வைத்தோம். எனவே மற்றவர்களுக்கு ஏற்படும் தோல்விகளில் இருந்தும் நாம் பாடம் கற்க முடியும்” என்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன்,சிறப்பு விருந்தினர் டாக்டர் மிஸ்ரா, ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: