மாங்கனி மாவட்ட மய்யம் கட்சியில் உட்கட்சி டார்ச்சரால் ஜகா வாங்கிய வேட்பாளர்: மாற்றாக வந்தவர் களத்தில் போட்டி

முக்கிய கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், சுயேச்சையாக களத்தில் குதித்து, தங்களது பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருசில கட்சிகளில், நிர்வாகிகளின் எதிர்ப்பால் வேட்பாளர் மாற்றமும் நிகழ்ந்துள்ளது. ஆனால் மாங்கனி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியில், உட்கட்சி பூசலால் வேட்பாளர் ஒருவரே ஜகா வாங்கிய கூத்தும் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் தெற்கு தொகுதிக்கான வேட்பாளராக மணிகண்டன் என்பவர் அறிவிக்கப்பட்டார். உற்சாகமடைந்த அவர், ஆர்வத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கினார். குறிப்பாக, தனது வேட்புமனு தாக்கலுக்கு வித்தியாசமாக வந்து கவனம் ஈர்க்க முடிவெடுத்த அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊரையே சுத்தப்படுத்துவோம்’ எனக்கூறி, கையில் சாக்கடை அள்ளும் மம்பட்டியை தூக்கி வந்தார்.

இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய அவர், திடீரென தேர்தல் போட்டியிலிருந்து ஜகா வாங்கி, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டாலும், அதற்கான காரணம் திடுக்கிட வைத்துள்ளது. அதாவது, அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர், தேர்தல் செலவுக்காக ரூ.10 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என வேட்பாளருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவர், வேறுவழியின்றி மனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதேசமயம், மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த மாவட்ட நிர்வாகியே, கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தான் போட்டியிட வேண்டும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகியே இந்த கூத்தை அரங்கேற்றியிருக்கலாம் எனவும், அக்கட்சியினர் முணுமுணுக்கின்றனர்.

Related Stories: