கர்நாடக மாநிலத்தில் பின்தங்கிய 9 தாலுகாக்களில் 10 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர்: ஆய்வில் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் பின்தங்கிய சுமார் 9 தாலுகாக்களில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் வீதம் சிகிச்சை அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மக்கள் அனைவரும் தங்களின் சம்பாத்தியத்தில், பாதி பணத்தை மருத்துவர்களிடமே செலவு செய்யும் நிலை ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக அரசு தரப்பில் மருத்துவமனைகள் அனைத்து பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் மாநிலத்தில் கல்யாண் கர்நாடகாவில் 4 தாலுகா மற்றும் தெற்கு கர்நாடகாவில் 5 தாலுகா என மொத்தம் 9 தாலுகாக்களில் 10 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் வீதம் சிகிச்சை அளிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த கணக்கெடுப்பின்படி, மருத்துவர்களின் எண்ணிக்கை மதிப்பீட்டின் படி 114 பின்தங்கிய தாலுகாக்களில் 100 தாலுகாக்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள தேவதுர்கா மற்றும் மான்வி தாலுகாக்கள், பல்லாரி மாவட்டத்தில் கூட்லகி தாலுகா, கொப்பளில் யல்பூர்கா தாலுகா, துமகூருவில் மதுகிரி மற்றும் துருவகெரே தாலுகாக்கள், சிக்கபள்ளபுரா மாவட்டத்தில்,கவுரிபிதனூர் மற்றும் பானேபள்ளி தாலுகாக்கள் மற்றும் ஹாசன் மாவட்டத்தில் அரசிகெரே ஆகிய 9 தாலுகாக்களில் 10 ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து  33 தாலுகாக்களில் பத்தாயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 34 தாலுகாக்களில் 3 மருத்துவர்களும், 19 தாலுகாக்களில் 4 மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் மட்டுமின்றி படுக்கை வசதிகளும் குறைவாகவே உள்ளது. 114 தாலுகாக்களிலும் 10 ஆயிரம் பேருக்கு 13 படுக்கைகள் மட்டுமே உள்ளது என தெரியவந்துள்ளது.  ரெய்ச்சூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சையத் ஹபீசுல்லா என்பவர் கூறியதாவது, ``மாவட்டத்தில் சுகாதார வசதி பெரும் பிரச்னையாகவே உள்ளது. தென் மற்றும் மத்திய கர்நாடகாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நாங்கள் சில நேரங்களில் கர்நாடகாவில் இல்லை என்பது போல் உணர்கிறோம்.

சுகாதார துறையில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளது. மகளிர் மருத்துவ நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் பல குழந்தைகள் தாய்மார்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர். நாங்கள் பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம் இருப்பினும் எந்த பயனும் இல்லை’’ என வருத்தத்துடன் தெரிவித்தார். சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர் டாக்டர் கே.வி.திரிலோச்சந்திரா கூறியதாவது: ​​அரசாங்கம் சுமார் 2,000 மருத்துவர்கள் மற்றும் 100 சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய உள்ளதாக கூறினார்.

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

சுகாதார துறை அமைச்சர் கூறுகையில், மருத்துவர்களை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிக்கபள்ளாபுரா உள்பட 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல், தற்போது உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளை விரிவாக்கம் உள்ளிட்ட மேம்பாடுகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசச சிகிச்சை பிரிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என தெரிவித்தார்.

அரசு கூறுவது என்ன?

இந்தியாவில் 1,500 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர்.

Related Stories: