67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை கங்கனா

* சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி

* ஒத்த செருப்பு படத்துக்கு 2 விருதுகள்

புதுடெல்லி: 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கும் சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனவத்துக்கும் வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆண்டு வழங்கப்பட இருந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக விருது அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழில் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வாகியுள்ளார். அவருடன் சேர்ந்து போன்ஸ்லே இந்தி படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகர்னிகா, பங்கா ஆகிய இந்தி படங்களுக்காக சிறந்த நடிகை விருதை கங்கனா ரனவத் பெற உள்ளார். மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள மலையாள படமான மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படம், சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. பார்த்திபன் நடித்து, தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு சிறந்த நடுவர் விருது என்ற பிரிவிலும் சிறந்த ஒலிப்பதிவுக்காக ரசூல் பூக்குட்டிக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசைக்கான (பாடல்களுக்கு) விருது இமான் பெறுகிறார். தமிழில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை கேடி என்கிற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் பெறுகிறார்.

மற்ற விருதுகள் விவரம்:

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி (தி தஷ்கென்ட் ஃபைல்ஸ்). சிறந்த இயக்குனர் - சஞ்சய் புரன்சிங் சவுகான் (பஹத்தர் ஹூரைன் - இந்தி படம்). குழந்தைகளுக்கான படம் - கஸ்தூரி (இந்தி). சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது - ஹெலன் (மலையாளம்). ஸ்பெஷன் மென்ஷன் படங்கள் - பிரியாணி (மலையாளம்), ஜொனகி பொருவா (அசாமி) லதா பகவான் கரே (மராத்தி), பிகாசோ (மராத்தி). சிறந்த தெலுங்கு படம் - ஜெர்சி. மலையாள படம் - கள்ள நோட்டம். கன்னட படம் - அக்‌ஷி. இந்தி படம் - சிச்சோரே. பெங்காலி படம் - கும்நாமி. சண்டை பயிற்சி - அவனே மநாராயணா (கன்னடம்). நடனம் - ராஜு சுந்தரம் - மஹரிஷி (தெலுங்கு). ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் (மலையாளம்). பாடல்கள் - கொலாம்பி (மலையாளம்). பின்னணி இசை - ஜெயிஷ்துபுத்ரோ. மேக்அப் - ஹெலன் (மலையாளம்). படத்தொகுப்பு - நவீன் நூலி - ஜெர்சி (தெலுங்கு). திரைக்கதை - ஜெயஷ்தோபுத்ரி (பெங்காலி). தழுவல் திரைக்கதை - கும்நாமி (பெங்காலி). வசனம் - தி தஷ்கென்ட் ஃபைல்ஸ் (இந்தி). ஒளிப்பதிவு - ஜல்லிக்கட்டு (மலையாளம்). பாடகர் - கேஸ்ரி (இந்தி). பாடகி - பர்தோ (மராத்தி). திரைத்துறைக்கு உகந்த மாநிலம் - சிக்கிம்.

தமிழுக்கு 6 விருதுகள்

கடந்த சில வருடங்களாக தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்களும் தமிழ் சினிமா கலைஞர்களும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த முறை தமிழ் சினிமாவுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதல் அளித்துள்ளது. தனுஷ், விஜய் சேதுபதி, ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு 2 விருது, இசையமைப்பாளர் இமான், குழந்தை நட்சத்திரம் நாக விஷால் ஆகியோர் இந்த விருதுகளை பெறுகின்றனர். தேசிய விருது தேர்வு பட்டியலுக்கான நடுவர்களில் தமிழ் சினிமாவிலிருந்து கங்கை அமரன் இடம்பெற்றிருந்தார்.

அசுரன் கதை என்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெறுகிறார். சிறந்த தமிழ் படத்துக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. பூமணியின் வெக்கை நாவலை தழுவி இந்த படம் உருவானது. படத்தில், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், குறிப்பிட்ட சமூகத்தால் பழிவாங்கப்படுகிறார்கள். இதில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறார். பதிலுக்கு இளைய மகனும் ஒரு கொலை செய்கிறான். இதனால் இளைய மகனை கொல்ல ஒரு கும்பல் துடிக்கிறது. மகனை தனுஷ் காப்பாற்றினாரா என்பதே கதை.

Related Stories: