மகாராஷ்டிரா அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் கடும் அமளி.

புதுடெல்லி: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அம்மாநில அரசு பதவி விலக கோரி எம்பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிப்பொருட்களுடன் கார் நின்ற விவகாரத்தில், மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஓட்டல்கள், பார்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து மாதம் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தனக்கு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவை ஜீரோ நேரத்தில் பேசிய பாஜ எம்பி. மனோஜ் கோட்டக், ``உயரதிகாரிகளை மகாராஷ்டிரா அரசு தவறாக பயன்படுத்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே எதுவும் கூறாமல் இருக்கிறார். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மகாராஷ்டிரா அரசு பதவி விலக வேண்டும்,’’ என்றார். இதே போல பாஜ எம்பிக்கள் பலரும் இந்த விவகாரத்தை எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவசேனா எம்பி விநாயக் ராத், ‘‘மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக பாஜ சதி செய்யப் பார்க்கிறது. இது ஒன்றும் பெரிய தேசிய பிரச்னை அல்ல. இதை பாஜ பெரிதுபடுத்துகிறது’’ என்றார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதே போல, மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அமைச்சர் அனில் தேஷ்முக் விவகாரம் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர மாநில அரசின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இந்த அமளியினால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை கோரி மனு இதற்கிடையே, மும்பை முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங், ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை கோரியும், தனது பணியிட மாறுதலை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆளுநருக்கு அதிகாரம்: மசோதா நிறைவேறியது

காப்பீட்டு திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், காப்பீட்டு துறையில் 49 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல, டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தேசிய தலைநகரான டெல்லியில் முதல்வர், ஆளுநர் இடையே அதிகார மோதல் தொடர்கதையாக உள்ளது. அதற்கு முடிவு கட்டும்வகையில், டெல்லி அமைச்சரவை எந்த முக்கிய முடிவு எடுத்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கட்டாயம் என்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: